என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுரை ஐகோர்ட்"
- அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான உபகரணங்கள் வீட்டில் இருப்பதாகவும் கூறி, காலம் கடத்தினார்.
- தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றார்.
மதுரை:
தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த ராஜன், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது மனைவி கடந்த 2021-ம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அதே ஆண்டு நவம்பர் 6-ந் தேதி தென்காசி முடியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றேன். அப்போது அங்கு பணியில் இருந்த அரசு டாக்டர், என் மனைவியை பரிசோதித்தார். சில மணி நேரத்துக்கு பின்பு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான உபகரணங்கள் வீட்டில் இருப்பதாகவும் கூறி, காலம் கடத்தினார்.
என் மனைவிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் ரத்தப்போக்கு ஏற்பட்டு, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். என் மனைவி உடல் நிலை மிக மோசமானதால், அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்து, 60 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் குணமாகாததால், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றார்.
இதனிடையே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனது மனைவிக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக மலக்குடலை கத்தரித்தது தெரியவந்தது. இதனால் அவர் கடும் அவதிக்கு ஆளானார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரின் அலட்சியத்தால் ஏராளமான பணத்தையும் செலவு செய்து, மன உளைச்சலுக்கு ஆளானோம். எனவே சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் கே.ஆர்.பாரதி கண்ணன் ஆஜராகி வாதிட்டார். விசாரணை முடிவில், மனுதாரர் புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
- ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
- தமிழகத்தில் இந்த வல்லுநா்கள் எந்த மாவட்டத்திலும் நியமிக்கப்படவில்லை.
பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவில், எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 2003- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், எனது கணவர் விவாகரத்து கோரி பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எனது கைப்பேசியில் நான் யாரிடமெல்லாம் பேசினேன் என்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் அவா் ஒப்படைத்தார். இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என விசாரணை நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை நீதிபதி தான் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் மனைவி பயன்படுத்திய கைப்பேசி ஆவணங்களை பெற சம்பந்தப்பட்ட கைப்பேசி நிறுவனத்துக்கு இணையதளம் மூலம் கணவர் வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்போது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓடிபி) வரும். இதைப் பயன்படுத்தி ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆனால், இந்த வழக்கில் மனைவிக்குத் தெரியாமல் அவரது கைப்பேசியை எடுத்து ஓடிபி எண்ணைப் பெற்று ஆவணங்களை கணவர் பதிவிறக்கம் செய்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருமணம் என்பது ஒருவரையொருவா் நம்ப வேண்டும். ஒருவரது தனி உரிமையில் மற்றவர் தலையிடுவது முறையாக இருக்காது. தனது டைரியை கணவா் பார்க்கக் கூடாது என மனைவி நினைப்பது சரியே. இது கைபேசிக்கும் பொருந்தும்.
ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த வழக்கில் மனைவியின் மனுவைத் தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாரதிய சாக்சிய ஆதினிய சட்டப்படியும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் மின்னணு தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்கும் போது வல்லுநா் சான்றளிக்க வேண்டும். இந்தச் சட்டம், கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது.
ஆனால், தமிழகத்தில் இந்த வல்லுநா்கள் எந்த மாவட்டத்திலும் நியமிக்கப்படவில்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநா்களை மூன்று மாதங்களில் நியமிக்க மத்திய தொழில்நுட்ப அமைச்சகச் செயலா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
- மூத்த குடிமக்கள் நலனை தினசரி பராமரித்து உயர் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
- தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை.
மதுரை:
மதுரை புதுமாகாளிபட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த வக்கீல் மணிபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தற்போது பெரும்பாலான மூத்த குடிமக்கள், பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளால் எந்த பாதுகாப்பும் கிடைக்காமல் உள்ளனர். இதனால் தனி மையில் வசிக்கும் பல முதியவர்கள் சமூக விரோதிகளின் தொந்தரவுகளை அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசு, மூத்த குமடிக்கள் மற்றும் பெற்றோர் நல விதி முறைகளை 2009-ம் ஆண்டில் ஏற்படுத்தியது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மூத்த குடிமக்கள், பெற்றோர்களின் பாதுகாப்பை அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்லது மாநகர போலீஸ் கமிஷனர் உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலைய அதிகாரியும், தனது எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் நலனை தினசரி பராமரித்து உயர் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
குறிப்பாக ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். மேலும் மாதத்துக்கு ஒரு முறையாவது மூத்த குடிமக்களை போலீஸ் நிலைய அதிகாரி சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இதற்காக அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை. இதனால் முதியவர்கள் சமூக விரோதிகளின் தொந்தரவுகளை சந்தித்து வருகின்றனர். எனவே ஐகோர்ட்டு மதுரை கிளை எல்லைக்கு உள்பட்ட மாவட்டங்களின் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இந்த விதிமுறைகளை கடைபிடித்து மூத்த குடிமக்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் மாதம் 20-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
- கும்பகோணம் உடையலூர் கிராமத்தில் அமைந்துள்ளது 5 குளங்கள் அமைந்துள்ளது.
- குளங்களில் குப்பை, கோழி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
மதுரை:
தஞ்சாவூர் மாவட்டம் உடைலூர் கிராமத்தை சேர்ந்த செல்வி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உடையலூர் கிராமத்தில் அமைந்துள்ளது 5 குளங்கள் அமைந்துள்ளது. இந்த குளங்களில் குளங்களில் மீன் பிடிப்பதற்கான குத்தகை ஏலத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் நடத்தினார். ஆனால் விதிகளை பின்பற்றாமல் விடப்பட்ட இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பஞ்சாயத்துகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கோவில்களில் இயற்கையான முறையில் பெருகி உள்ள மீன்களை பிடிக்க ஏலம் விடப்படுகிறது. ஆனால், இயற்கையான முறையில் பெருகி உள்ள மீன்களை பிடிக்காமல் வணிக நோக்கில் பல்வேறு வேதியியல் பொருட்களை கலந்து மீன்களை பெருக்குகின்றனர்.
மேலும், அப்பகுதி மக்கள் குளங்களில் குப்பை, கோழி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகின்றனர். எனவே நீரின் தரம் மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு குளத்து நீரையே குடிநீராக பயண்படுத்தினர். தற்போது, குளத்து நீரை கால் நடைகள் கூட குடிக்க முடியவில்லை. இந்த நிலை ஏற்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கண்மாய், குளம் உள்ளிட்ட நீர் நிலைகளின் தரம் எவ்வாறு உள்ளது. கழிவு நீர் குப்பைகள் கொட்டப்படுகிறதா, நீர் நிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தஞ்சாவூர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மீன் வளத்துறை அதிகாரிகள், விவசாயத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
- மழை நீரானது அதனுடைய ஓட்டத்தில் செல்லாமல் தடுக்கப்படுகிறது.
- விவசாய நாட்டில், விவசாயத்தை அழிக்க கூடாது.
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி தனபதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1974-ம் ஆண்டு வரை 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பசுமையான காடுகளாக இருந்தன. இவை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குளங்களுக்கு நீராதாரமாக விளங்கியதோடு, விவசாயத்திற்கும் உறுதுணையாக இருந்தது. ஆனால் 1974-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வணிக நோக்கில் யூகலிப்டஸ், முந்திரி போன்ற மரங்கள் தமிழக வனத்தோட்ட கழகத்தால் நடப்பட்டன.
இந்த மரங்களை வளர்ப்பதற்காக வனப்பகுதியில் உள்ள காடுகளை அழித்து, யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதற்காக, நாற்புறங்களிலும் அகழிகளையும், பெரிய மண் தடுப்புகளையும் அமைத்து வருகின்றனர். இதனால் மழை நீரானது அதனுடைய ஓட்டத்தில் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதனால் கிராமங்களில் உள்ள கண்மாய் குளம் நிறையாமல் விவசாயம் தடைபடுகிறது.
இதனால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதோடு, புதுக்கோட்டை மாவட்டத்தின் பாரம்பரிய நீர் மேலாண்மை அமைப்பு சிதையும் நிலையில் உள்ளது. தொடர்ந்து வனப்பகுதியில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டு வருகிறது.
ஆகவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை நட இடைக்காலத் தடை விதிப்பதோடு, நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நீக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நகர் மயமாக்கலால் நாள்தோறும் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாய நாட்டில், விவசாயத்தை அழிக்க கூடாது. விவசாய சாகுபடி நிலங்கள் குறைந்து வருகிறது. கர்நாடகாவில் கனமழை பெய்தால் தான் காவிரி ஆற்றில் தண்ணீர் வருகிறது.
நாளுக்கு நாள் விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நாம் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அதிகரிக்கும். தற்போது துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்களை இறக்குமதி செய்கிறோம்.
காகித ஆலை வேண்டுமா, உணவு வேண்டுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் வன பரப்பில், யூகலிப்டஸ் மரங்கள் அதிகம் வளர்ப்பதால், இதற்காக ஆங்காங்கே ஏற்படுத்தும் தடுப்புகளால், சமவெளி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு மழை நீர் வருவது தடுக்கப்படுகிறதா? என 6 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
- சம்பவ இடத்திற்கு குபேந்திரன் என்பவர் வந்து, பெண் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தனது ஆடைகளை அவிழ்த்து காண்பித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- எதிர்காலத்தில் போலீசாருக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடக்கமாட்டேன் என்றும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
மதுரை:
கடந்த ஜனவரி மாதம் தஞ்சாவூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் பெண் போலீசார் ஆதிநாயகி, ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பொது இடத்தில் அமர்ந்து சிலர் மது அருந்தியுள்ளனர். இதை பார்த்ததும், பெண் போலீஸ், கோவிலில் மது அருந்தக்கூடாது என்று கூறி, அவர்களை கண்டித்து கலைந்து செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இதனால் மதுபோதையில் இருந்த சிலர், போலீசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு குபேந்திரன் என்பவர் வந்து, பெண் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தனது ஆடைகளை அவிழ்த்து காண்பித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தஞ்சை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் பேரில் சிலரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் குபேந்திரன் என்பவர் தனக்கு ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர் போலீசாருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். பெண் போலீசை அவமானப்படுத்தும் வகையில் அநாகரீகமாக நடந்துள்ளார். எனவே மனுதாரருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரர் நீண்டநாளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் எதிர்காலத்தில் போலீசாருக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடக்கமாட்டேன் என்றும் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது.
அவர், நாள்தோறும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் நீதிபதி பிறப்பித்து, மனுதாரருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
- வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மதுரை:
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து, அங்கித் திவாரியிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என முடிவு செய்வதற்காக இன்று நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமான மாவட்ட கோர்ட்டு உத்தரவுகளை அமலாக்கதுறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டு, வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தே திக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
- பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது.
- இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஆயிரத்து 431 சதுர அடி காலிமனையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நடத்தி வரும் தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு 1984-ம் ஆண்டில் இருந்து வாடகைக்கு வழங்கப்பட்டது.
இந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை 34 ஆண்டு காலத்துக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் ரூ. 2 கோடியே 32 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாமல் பாக்கி வைத்து இருந்தது. இந்த வாடகை பாக்கி வசூலிக்க குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பல தடவை நோட்டீசு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த வாடகை பாக்கியை வட்டியுடன் வசூலிக்கு உத்தரவிட வேண்டும் என்று திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி புகழேந்தி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திடம் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியில் ஒரு தவணையாக முதல் கட்டமாக ரூ.84 லட்சத்து 70 ஆயிரத்து 46-க்கு காசோலையை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
- தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
மதுரை:
மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆனந்தி ஷா என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தனது இடத்தை அபகரித் துக் கொண்டதாக கூறி நில அபகரிப்பு சட்டத்தின்கீழ் மேற்கு வங்காளத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் மீது மதுரை குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் தற்போது தலைமறைவாகி உள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிந்து ஓராண்டு ஆகியும், இன்னும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் காவல்துறையினர் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் இருக்கிறார் என தெரிந்தும் காவல்துறையினர் அவரை மீட்டு வந்து விசாரிக்கவில்லை.
எனவே நில அபகரிப்பு வழக்கை விரைந்து விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதி சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் போதுமான தகவல் இல்லை என கூறிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் மறைந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தலைமறைவு குற்றவாளிகள் குறித்து காவல்துறை ஏன் முன்னணி நாளிதழ்களில் அவர்களது விவரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்துவதில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், அண்டை மாநிலமான கேரளத்தில் பிரபலமான முன்னணி நாளிதழ்களில் தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதனை நாள்தோறும் பார்க்க முடிகிறது.
காவல்துறையின் இது போன்ற நடவடிக்கை குற்றவாளிகளுக்கு உறுதுணையாக பாதுகாப்பது போல் உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் தென்மண்டல காவல்துறை தலைவர், ஐ.ஜி. மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோர் தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏன் என்பது குறித்து விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
- பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நோயாளிகள் என பலதரப்பட்டவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள்.
- மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் நேற்று நீதிபதிகள் விஜயகுமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பும் முறையிட்டனர்.
மதுரை:
திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை 9-ந்தேதி (இன்று) முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் சட்ட விரோதமானது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நோயாளிகள் என பலதரப்பட்டவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள்.
அதுமட்டுமல்லாமல் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வருகிறது. எனவே போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் நேற்று நீதிபதிகள் விஜயகுமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பும் முறையிட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்திருந்தனர்.
அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது. எனவே இந்த வழக்கை நாளை ஒத்திவைக்குமாறு முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை நாளைக்கு (10-ந்தேதி) ஒத்திவைத்தனர்.
- மகளிர் உரிமைத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவதைப் போல, பொங்கல் பரிசுத் தொகையையும் செலுத்தலாம்.
- கரும்பு கொள்முதலுக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாமே?
மதுரை:
பொங்கல் தொகுப்பில் வெல்லம் வழங்க வேண்டும், ரூ.1000 ரொக்கத்தை வங்கியில் வரவு வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொங்கல் பரிசுத் தொகையை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது?
மகளிர் உரிமைத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவதைப் போல, பொங்கல் பரிசுத் தொகையையும் செலுத்தலாம். கரும்பு கொள்முதலுக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாமே?
அடுத்தாண்டு சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
- திட்டமிட்டபடி வரும் 9-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
- அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.
மதுரை:
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி வரும் 9-ந்தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம். போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்